
மெசேஜ் ஆப்களில் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் ஆகியவை உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மெட்டா நிறுவனம்வாட்ஸ்ஆப்பை இயக்கி வருகிறது. துபாயை மையமாக கொண்டு செயல்படும் டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, ஃபேஸ்புக்கில் ரஷ்ய ஆதரவு செய்திகளுக்கு தடை விதித்தது. இதற்கு போட்டியாக ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்குள்ள தகவல் தொடர்பு நிறுவனங்கள் டெலிகிராம் ஆப்பை அதிகம் விளம்பரப்படுத்தி வருகின்றன.
ரஷ்யாவில் பிப்ரவரி முதல் 2 வாரங்களில் டெலிகிராம் ஆப் பயன்பாடு 48 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோன்று 48 சதவீத பயன்பாடாக இருந்த வாட்ஸ்ஆப் தற்போது 32 சதவீதமாக குறைந்துள்ளது.