கடந்த பிப்ரவரி மாதம் இறுதி முதல் உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைன் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்காணோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று வரும் நிலையில், அங்கு பயின்ற மாணவர்களும் அவர்களது சொந்த நாடுகளுக்கு சென்றனர். போரில் உயிருடன் மீண்டாலும், படிப்பைத் தொடர்வது குறித்த பீதி மாணவர்களிடையே எழுந்துள்ளது.
இந்தநிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்கள் உதவுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, உக்ரைனில் மருத்துவம் படித்துவிட்டு அந்த படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில், நடப்பு செமஸ்டருக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும், முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தடையின்றி படிப்பைத் தொடர ஏதுவாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் உறுதி அளித்துள்ளன.
இதேபோன்று கிரீமியா, கஜகஸ்தான், ஜார்ஜியா, ஆர்மேனியா, பெலாரஸ், போலந்து நாடுகளும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. உக்ரைனில் மருத்துவம் படித்து இந்தியா திரும்பியுள்ள 16 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் அழைப்புகள் அவர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது.