
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் எப்போதும் இல்லாத அளவிற்கு அழிவைச் சந்தித்து வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையில் பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கனமழை, வெள்ளம், மடகாஸ்கரை புரட்டிப் போட்ட பட்சிராய் புயல், வடமேற்கு ஐரோப்பாவை தாக்கிய யூனிஸ் புயல் என அடுத்தடுத்து பேரழிவுகள் அரங்கேறி வருகின்றன.
1970-ம் ஆண்டுகளில் இருந்ததை விட வானிலை தொடர்பான அழிவுகள் தற்போது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும், புயல், வெள்ளம், வெயில் மற்றும் வறட்சியால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருப்பதாக உலக வானிலை அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்கள்தான் கோடைக்காலமாக கருதப்படும் நிலையில் நடப்பாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக மார்ச் மாதத்திலேயே உச்சம் தொட்டு விட்டது.
பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு முன் 1901-ம் ஆண்டு மார்ச் மாதம்தான் இந்த அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் 122 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது.
இந்தநிலையில் உலக அளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த அறிக்கையை ஐநா காலநிலைக்குழு நாளை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.