100 கி.மீ தூரத்துக்கு குவான்டம் தகவல் தொடர்பு சோதனை வெற்றி

முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெல்லி ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை !!
100 கி.மீ தூரத்துக்கு குவான்டம் தகவல் தொடர்பு சோதனை வெற்றி

நாட்டில் முதல்முறையாக, குவான்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 கி.மீ. தூரத்துக்கு பாதுகாப்பாக தகவலை பரிமாறும் வகையில் டிஆர்டிஓ, டெல்லி ஐஐடி இணைந்து நடத்தியசோதனை வெற்றி பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள், டெல்லி ஐஐடி பேராசிரியர்கள் இணைந்து குவான்டம் தகவல் தொடர்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் - விந்தியாசல் நகரங்கள் இடையே ‘குவான்டம் சாவி விநியோகம்’ (Quantum Key Distribution) என்றதொழில்நுட்பம் மூலம் தகவல் பரிமாற்ற சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது. ஒளி இழை வடத்தை (Optic Fiber Cable) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இதன்மூலம் நாட்டில் முதல்முறையாக, குவான்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 கி.மீ. தூரத்துக்கு பாதுகாப்பாக தகவலை பரிமாறும் தொடர்புசோதனை வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மிகவும் பாதுகாப்பான ராணுவ தகவல் தொடர்புதொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை. மேலும், பாதுகாப்பு படைப் பிரிவுகள் உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் தங்கள் தகவல் தொடர்பு வலைப் பிணைப்பை திட்டமிட்டு கட்டமைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குவான்டம் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறியதாவது:

வழக்கமான தகவல் பாதுகாப்பு, கணிதப் படிமுறைகளின் (Mathematical Algorithms) அடிப்படையில் இயங்குகிறது. திறன்மிக்க கணினியை கொண்டு அவற்றை எளிதாக தகர்க்க முடியும். அதை தடுப்பதற்கு மேலும்சிக்கலான கணிதப் படிமுறைகள் பயன்படுத்தப்படும்.

எதிர்காலத்தில் அதிக சக்திவாய்ந்த மீத்திறன் கணினிகள் (Super Computers) உருவாக்கப்படும்போது, மறுபடியும் பாதுகாப்பு முறைகள் உடைக்கப்படும்.

அதேநேரம், குவான்டம் தொழில்நுட்பம் வாயிலான தகவல் பாதுகாப்பு, குவான்டம் இயற்பியலை அடிப்படையாக கொண்டது. இந்த வகையிலான தகவல்தொடர்பை எதிர்கால மீத்திறன் கணினிகளாலும் (Super Computers) திருட முடியாது. அதனால், மிகவும் பாதுகாப்பான குவான்டம் தகவல் தொடர்பு உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் உருவாவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com