இரயில்வேயில் கவச் தொழில்நுட்பம் : எப்போது முதல் இயக்கப்படும் ?

இரயில்வேயில் கவச் தொழில்நுட்பம் :  எப்போது முதல் இயக்கப்படும் ?

வெளியூர் பயணங்களுக்கு கார் முதல் விமானம் வரை எத்தனை வாகனங்கள் இருந்தாலும், ரயிலில் பயணம் செய்வதே தனி சுகம். பல லட்சம் மக்களையும், பல்லாயிரம் கோடி மதிப்பு பொருட்களையும் சுமந்து செல்லும் ரயில்கள் விபத்தில் சிக்குவது மிகவும் அபூர்வம்.

ஆனால், கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் 2 ரயில்கள் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பிரேக் பிடிக்காத மின்சார ரயில் நடைமேடையில் மோதி நின்றது.

அது அகற்றப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் மதுரை கூடல் நகரில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது கவச் தொழில்நுட்பம்.

ஜீரோ ஆக்சிடெண்ட் என்ற நோக்கத்தை மையமாக 2012 முதல் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதுதான் இந்த கவச் தொழில்நுட்பம். பாதுகாப்பு கவசம் என்பதன் சுருக்கமே இந்த கவச். ரயில் எஞ்ஜின், சிக்னல் அமைப்பு, ரயில் நிலையம் ஆகியவற்றில் நிறுவப்படும் கவச் தொழில்நுட்பம், ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ அலைவரிசை மூலம் இயங்கக்கூடியது

ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வரும்போது, ஓட்டுநர்களுக்கு ஆடியோ, வீடியோ மூலம் முதலில் எச்சரிக்கை விடுக்கிறது கவச். ஓட்டுநர்களிடம் இருந்து அப்போதும் பதில் வராவிட்டால் தானாக வேகத்தை குறைத்து குறிப்பிட்ட தூரத்தில் ரயில்களை நிறுத்திவிடுவதுதான் இதன் சிறப்பம்சம்.

ஆபத்தில் இருக்கும்போது அனுப்பப்படும் சிக்னலுக்கு ரயில் ஓட்டுநர் செயல்பட தவறினாலும், சிவப்பு சிக்னலை தாண்டியவுடன் தானாகவே பிரேக் போடும்.

ஓட்டுநர்கள் குறட்டை விட்டு தூங்கினாலும், விழிப்போடு செயலாற்றி விபத்தை தவிர்ப்பதே இதன் நோக்கம்.

ஆந்திராவின் செகந்திராபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையில் நம்பிக்கை தந்திருக்கிறது இந்த தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் விரைவில் அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில், அச்சமில்லாமல் ரயில் பயணத்தை அனுபவிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com