
துபாய் : துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு தி ஜெட் என்று பெயரிடப்பட்டுள்ளது. நீர் வழியில் அதிவேகமாக செல்லக் கூடிய அளவில் இந்த படகு தயாரிக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதை அடுத்து தற்போது தி ஜெட் ஹைட்ரஜன் எரிவாயு படகின் பயன்பாட்டிற்கு துபாய் அனுமதி அளித்துள்ளது.
சொகுசு படகாக உருவாக்கப்பட்டுள்ள இதில் 8 முதல் 12 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளது.ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் இதில் இருந்து புகை போன்ற உமிழ்வுகள் வெளியேறுவதில்லை. இந்த படகு இயங்கும் போது சத்தம் வரவில்லை என்பதுடன் நீர் பரப்பிற்கு 80 செமீ மேலே மணிக்கு 75 கிமீ வேகத்தில் பறந்து செல்லும். ஹைட்ரஜன் எரிசக்தியால் இந்த படகு இயங்குவதால் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது. விரைவில் துபாய் கடல் பகுதியில் இந்த ஜெட் படகு பயணிகளை மகிழ்விக்க உள்ளது.