ட்விட்டரில் அதிரடி மாற்றம் : விரைவில் எடிட் பட்டன்?
சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரை 44 பில்லியனுக்கு, அதாவது இந்திய மதிப்பில் 3.3 லட்சம் கோடி ரூபாய்க்கு டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் வாங்கினார். மஸ்க் நிறுவனத்தின் முழு உரிமையையும் இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், ட்விட்டரில் வரப்போகும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வதந்தியாகி வருகின்றன.
அத்தகைய ஒரு அம்சம் Edit பட்டன். கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் வாசிகள் இந்த வசதியை கோரி வருகின்றனர். மஸ்க் இதற்கும் சூசகமாக பதிலளித்திருந்தார். ட்விட்டர் அதற்கான வேலைகளையும் செய்து வருதாக தெரிவித்திருந்தார். இப்போது மஸ்க்கின் தாய் மாயே மஸ்க்கும் இந்த அம்சத்தைப் குறித்து கேட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் தாயார் மாயே மஸ்க்கும் ட்விட்டரில் எடிட் பட்டனைக் கோரியுள்ளார். தாஜ்மஹாலுடன் இருக்கும் புகைப்படத்தை மேய் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எடிட் பட்டன் கோரிய எலான் மஸ்க் தாய் அந்த புகைப்படத்தை பதிவிட்ட அவர், 2007 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தாஜ்மஹாலை பார்க்க வந்ததாக எழுதியிருந்தார். இருப்பினும், இந்த ட்வீட்டை மீண்டும் ரீட்வீட் செய்த அவர், இது 2007இல் இல்லை என்றும், 2012-இல் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறினார்.
மேலும், இதனை மாற்ற எடிட் பட்டன் எங்கே? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். ட்விட்டர் பயனர்களும், எலான் மஸ்க் தாயின் ட்விட்டர் பதிவுக்கு தொடர்ந்து பதிலளிக்க, அந்த பதிவு சூடுபிடிக்கத் தொடங்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பயனர்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
பல ஆண்டுகளாக ட்விட்டரில் எடிட் பட்டனை பயனர்கள் கோரி வருகின்றனர். வெளியாகி உள்ள தகவல்களின்படி, சந்தா அடிப்படையில் இயங்கும் சேவையான ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு எடிட் பட்டன் அம்சம் முதலில் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.