சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நீதிமன்ற ஜாமின் நிபந்தனைப்படி கையெழுத்திட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆஜரானார். அப்போது கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஏற்கனவே கடந்த 2 வாரங்களாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாகவும், அதேபோல ஒவ்வொரு திங்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைப்படி இன்று ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சனி, ஞாயிறு உட்பட மீதமுள்ள நாட்களில் ராயபுரம் N1 காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைத்தும் அவர்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிற்சங்கங்கள், தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த பழைய பென்ஷன் திட்டம், ஊதிய உயர்வு, 100 ரூபாய் கேஸ் மாநியம், கல்விக் கடன் ரத்து உள்ளிட்டவை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மாநில அரசு முழுக்க முழுக்க தொழிலாளர் விரோதப் போக்கை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த பயணம் அரசுமுறைப் பயணமா? அரசர் முறை பயணமா? முதலீட்டை ஈர்க்கவா? முதலீடு செய்யவா? எனவும் கேள்வி எழுப்பினார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தி.மு.க ஒரு குடும்பக் கட்சி என்பதற்கு மக்களே சாட்சி எனவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்ற அ.தி.மு.க-வின் நிலைபாட்டை பின்பற்றி நாங்கள் எடுத்த அதேபோன்ற சட்டப் போராட்டத்தை தான் தி.மு.க அரசும் முன்னெடுத்துள்ளதாகவும், விரைவில் மத்திய பா.ஜ.க அரசுக்கு அடிமை வேலை செய்யக்கூட தி.மு.க தயாராகிவிடும் எனவும் அவர் கூறினார்.