பணி நேரத்தில் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது
திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணி கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதிகா, தனக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், பணியிடத்தில் தன்னுடன் பணிபுரிவோரை வீடியோ பதிவு செய்யக் கூடாது என பலமுறை எச்சரித்த பின்னரும், மனுதாரர் தொடர்ந்து வீடியோ பதிவு செய்து வந்ததால் அவருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறி வருவதாகவும், அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல என்றும் நீதிபதி கூறினார். எனவே இது தொடர்பான விதிகளை தமிழக சுகாதாரத்துறை செயலர் உருவாக்க வேண்டும் என்றும், அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலர் 4 வாரங்களுக்கு உள்ளாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.