தபால் நிலையங்கள் போல உயர் நீதிமன்றம் செயல்பட முடியாது
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பிக்கும் போது 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இத்தொகையை, போஸ்டல் ஆர்டர்களாகவோ, வரைவோலைகளாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு பதில் ஆர்.டி.ஐ. ஸ்டாம்ப்களை அறிமுகப்படுத்தலாம் என மத்திய தகவல் ஆணையம் 2013ல் அளித்த பரிந்துரையை அமல்படுத்தக் கோரி நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போஸ்டல் ஆர்டர்கள், வரைவோலைகள் பெற்று விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவ்றுகளால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய தகவல் ஆணையத்தின் பரிந்துரை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிந்து கொள்ளாமல், பொது நல வழக்கு மூலம் விசாரணை நடத்த முடியாது எனவும், தகவல்களை சேகரிக்கவும், பரிமாறவும் உயர் நீதிமன்றம் தபால் நிலையம் போல செயல்பட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும், மத்திய தகவல் ஆணையம் பரிந்துரை மட்டுமே வழங்கியுள்ளதாகவும், அது சட்டமாகாது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.