பெண் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கத்தினர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்துள்ள நடமாடும் மருத்துவ முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பெண் காவலர்கள் மார்பகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கவனிக்காமல் கடந்து விடுகின்றனர். நாளடைவில் இது மார்பக புற்றுநோயாக மாறுகிறது. இதனை ஆரம்ப காலத்திலேயே தெரிந்து கொண்டால் உடனடியாக சரி செய்துவிடலாம் என்றார். மேலும் அப்பல்லோ மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவியர் இணைந்து நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாம் உருவாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையில் ஒரு டிஜிபி, 16 ஐஜிக்கள், 10 டிஐஜிக்கள், 27 எஸ்பிக்கள், 3 ஏஎஸ்பிக்கள், 19 ஏடிஎஸ்பிக்கள், 37 டிஎஸ்பிக்கள், 20 ஆயிரம் பெண் காவலர்கள் மொத்தம் 23 ஆயிரத்து 533 பெண்கள் தமிழக காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட 21 சதவீதம் தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எல்லா துறையிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மகளிர் தினமான இன்று பெண்களின் சேவையை பாராட்ட வேண்டும். முந்தைய காலங்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடையாது. பெண்கள் சாதித்து வருவதற்கு காவல்துறை ஒரு எடுத்துக்காட்டு என்றார்.