அரசு நிலங்களின் பரப்பு சுருங்குகிறது... நீதிமன்றம் வேதனை

ஆக்கிரமிப்புகளை தடுக்காததால், அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
அரசு நிலங்களின் பரப்பு சுருங்குகிறது... நீதிமன்றம் வேதனை

பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அண்ணாதுரை தாக்கல் செய்துள்ள மனுவில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியை, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை ஏற்று, தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் பல காரணங்களால் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், பெத்தேல் நகர் குடியிருப்பு பகுதியிலிருந்து காலி செய்யுமாறு தங்களுக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியதாகவும், தங்களுக்கு பட்டா வழங்கி உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அந்த நிலத்திற்கு பட்டா கோர உரிமையில்லை எனவும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்ய அரசு அனுமதி அளிக்கு வேண்டும் எனவும்,

பெத்தேல் நகரில் ஒரு சிலர் மட்டுமே தொடக்கத்தில் இருந்து அங்கு வசிப்பதாகவும் மற்றவர்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியவர்கள் என்பதால் பட்டா வழங்கினால் ஆக்கிரமிப்புக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது போல் ஆகும் எனவும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அரசின் அனுமதி உத்தரவு இல்லாமல் மாவட்ட ஆட்சியரால் நிலத்தை வகைமாற்றம் செய்ய முடியாது என்பதால், நிலத்தை வகைமாற்றம் செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது என உத்தரவிட்டனர்.

மேலும், ஆக்கிரமிப்புகளை தடுக்காததால், அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக தெரிவித்த நீதிபதிகள், அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய் துறை அதிகாரிகளின் கடமை எனவும் அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது எனவும் குறிப்பிட்டனர்.

ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்நீதிமன்றம் உதவாது எனக் கூறிய நீதிபதிகள், பட்டா கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்..

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com