மத்திய அரசிற்கு சரக்கு மற்றும் சேவை வரியால் (GST) வசூலான தொகை விவரங்கள் தொடர்பாகவும் தமிழக அரசிற்கு உரிய இழப்பீடு நிதிகளை மத்திய நிதித்துறை முழுமையாக விடுவித்து உள்ளதா? என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 2021-2022ம் நிதி ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை மத்திய சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் 2,43,307 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதேபோல் சர்வதேச இறக்குமதிக்கான சேவை வரியின் கீழ் 6,87,800 கோடி ரூபாயும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் 3,11,838 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளது. இவை தவிர 90,442 கோடி ரூபாய் செஸ் வரி வருவாயாக கிடைத்து உள்ளது எனவும் மொத்தமாக 2021-2022ம் நிதி ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை 13,33,387 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021-2022 நிதியாண்டில் தமிழகத்திற்கு 6,697 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடுத் தொகையாக மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது. மேலும் கடனாக 8,095 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது; இதேபோல் 2021-2022 நிதியாண்டில் மத்திய அரசு தமிழகத்திற்கு 6,733 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விடுவிக்கப்பட உள்ளதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.