தொடங்கியது வேலை நிறுத்த போராட்டம்: திண்டாடும் பொதுமக்கள்

தொடங்கியது வேலை நிறுத்த போராட்டம்: திண்டாடும் பொதுமக்கள்

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் வேலை, பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் இன்றும் நாளையும் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன. நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைதொடர்பு, தபால், வருமான வரித்துறை, செம்புத்துறை, வங்கிகள், மின்சாரம், காப்பீடு என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அமைப்புகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளன.

இதற்கு நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் 30-ந் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் வேலை, பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேநேரம் இந்த வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் மாநிலங்களும் இந்த போராட்டத்தை முறியடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.

தமிழகத்தில், நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனாலும், போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com