மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன்.
இந்நிலையில் அவரின் தாயார் அற்புதம்மாள் வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த மே மாதம் 28 முதல் தற்போது வரை பேரறிவாளன் சுமார் 9 மாத காலமாக வீட்டிலேயே இருந்து கொரானா தடுப்பூசி மற்றும் பல்வேறு உடல் ரீதியான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது வரை சுமார் 9 மாத காலமாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதன் காரணமாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதத்தின் முதல் வாரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கபட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “பேரறிவாளனின் உடல்நிலை சீராக உள்ளதற்கு முக்கிய காரணம் பரோல் நீடிப்பு ஆகும். மேலும் தற்போது சுதந்திரமாக இருந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக பேரறிவாளன் கூறினார். அதன் காரணமாக தற்போது தமிழக அரசால் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த முதல் ஏற்பாடாக பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பேரறிவாளன் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டவர். தற்போது அதற்கான பொருளாதார வசதி இல்லை வருங்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்தில் பேரறிவாளன் ஈடுபடுவார். 30 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு என் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.