தேவைப்பட்டால் பாதுகாப்புக்காக பேருந்துகளில் போலீசார் பயணிப்பர்

தேவைப்பட்டால் பாதுகாப்புக்காக  பேருந்துகளில் போலீசார் பயணிப்பர்

புறநகர் ரயில்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் பயணிப்பது போலவே, சென்னை மாநகர பேருந்துகளிலும் இரவு நேரங்களில் காவலர்கள் பயணிக்கும் திட்டம் தேவைப்பட்டால் நடைமுறைப்படுத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால்,

சென்னையில் குற்றசம்பவம் நடைபெறுவது புதிதல்ல ஆனால் அதனை தடுக்க அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25 சதவிகிதம் குற்றங்கள் குறைவாக நடைபெற்றுள்ளது.

பள்ளி கல்லூரி வளாகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை காவல்துறை கண்காணித்து வருகிறது. போதை பொருளிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடைநிலையில் விற்பனை செய்பவர் மட்டுமின்றி மூலகாரணமானவர் வரை கைது செய்யப்படுகின்றனர். போதை பொருளிற்கு எதிராக 240 பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளிலும் போதை பொருளிற்கு எதிரான தன்னார்வலர்கள் ஒன்றிணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ள இடங்களில் மற்றும் வழிதடங்கள் குறிப்பிட்ட நேரங்களில் காவலர்கள் தொடர்ந்து ரோந்து பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் தேவைப்படும் பட்சத்தில் புறநகர் ரயில்களில் காவலர்கள் பாதுகாப்பிற்கு பயணிப்பது போல, சென்னை மாநகர பேருந்திலும் இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் பயணிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படும். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 1.17 கோடி ரூபாய் மதிப்பில் சிசிடிவி கேமராக்களை பழுதுநீக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 130 கோடி ரூபாய் நிர்பயா திட்டத்தின் மூலம் பெறப்பட்டு புதிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com