திருடுபோன மயில் சிலையை தேடும் பணியில் 2வது நாளாக அதிகாரிகள்

திருடுபோன மயில் சிலையை தேடும் பணியில் 2வது நாளாக அதிகாரிகள்

Published on

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் திருடுபோன மயில் சிலையை தேடும் பணியில் 2வது நாளாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், தேசிய கடல்சார் தொழிற்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள மயில் சிலை திருடு போனது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கை விரைவாக விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் சிலை வீசப்பட்டு இருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது மயில் சிலைக்கு பதிலாக இரட்டை தலை நாக சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட வேறு சிலைகளே கண்டெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் குளத்தின் ஆழத்துக்குச் சென்று முழுவதுமாக தேட முடியாத காரணத்தினால், தேசிய கடல்சார் தொழிற்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நாடினர்.

அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய கடல்சார் தொழிற்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோர் இணைந்து நேற்று முதல் அதிநவீன கருவிகளைக் கொண்டு தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுக்குள் மூழ்கிய டார்னியர் விமானத்தை கடலில் தேட பயன்படுத்தப்பட்டது போன்ற அதிநவீன கருவி மூலம் தெப்பக்குளத்தில் 3 நாட்களாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட திட்டமிட்டு இன்று 2வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று பிரத்தியேக கருவிகளைக் கொண்டு குளத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆழம் அளக்கப்பட்டு, பின்னர் சிலையைத் தேடும் நடவடிக்கையாக அதிநவீன கருவியின் உதவியுடன் குளத்தினுள் தென்படும் அதிர்வுகளை வைத்து தெப்பக்குளத்தில் சிலை போன்ற பொருட்கள் இருக்கும் இடங்களையெல்லாம் குறித்து வைத்துள்ளனர்.

2 ஆம் நாளான இன்று Deep See Viewer என்ற கருவி மூலம் குளத்தின் ஆழத்தில் சிலை போன்ற பொருட்கள் இருப்பதாக குறித்து வைக்கப்பட்ட இடங்களில், கருவியை நீருக்குள் செலுத்தி கேமரா மூலம் பார்த்து தேட உள்ளனர். அதன் தொடர்ச்சியாக நாளை இன்று கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் சந்தேகிக்கும் படியாக மயில் சிலை போன்ற உருவங்கள் இருக்குமாயின் அந்த குறிப்பிட்ட இடத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பயன்படுத்தி தீயணைப்புத் துறையினர் குளத்துக்குள் மூழ்கி அப்பொருளை வெளியில் எடுத்து ஆய்வு செய்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு 3 நாட்கள் அதிநவீன கருவிகள் கொண்டு சிலையை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

logo
vnews27
www.vnews27.com