சட்டப்பேரவையில் அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக அதிமுக அரசு அவசர சட்டம் பிறப்பித்து தடை செய்யப்பட்டதாகவும், இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆன்லைன் நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடியதாகவும், இதையடுத்து, 03.08.2021 அன்று அதிமுக அரசு இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார். ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், 100 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் முதல்வருக்கு மாற்று கருத்து இல்லை என்றும், இந்த சட்டம் அதிமுக ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்டதாகவும்,எதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற குறிப்புகள் முறையாக இல்லாததால்தான் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததாகவும் கூறினார். இருப்பினும், அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை நிலைநிறுத்தவே உச்சநீதிமன்றம் சென்றுள்ளதாக கூறிய அவர்,நடைமுறையில் இருக்கும் சட்டங்களை கொண்டு, திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காப்பாற்றும் பணியை செய்து வருவதாகவும், உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் எனவும் கூறினார்