
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, சிங்கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி லோகேஸ்வரி, மூன்றாவது குழந்தையை பெற்றெடுப்பதற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பிரசவ வலியில் துடித்த போதும், அவருக்கு குழந்தை பிறக்கவில்லை.
மருத்துவமனையில் காலை 11 மணிக்கு சேர்ந்த நிலையில், மாலை 6 மணிக்கு தான் மருத்துவர் வந்து பார்த்துள்ளார். அதன்பின் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் இல்லாததால், தனியார் ஆம்புலன்சில் 2000 ரூபாய் கட்டணம் செலுத்தி சென்ற அவருக்கு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது, குழந்தை இறந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அழைத்து வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி லோகேஸ்வரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், குடியாகுடியாத்தம் அரசு மருத்துவமனையில் தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க மருத்துவர்கள் இல்லாததும் ஆதாரங்களில் இருந்து தெளிவாவதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 வாரங்களில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேரமும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்யும்படி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும்படியும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.