காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு வரப்போகும் ஆபத்து?

காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு வரப்போகும் ஆபத்து?

உலக மக்கள் தொகையில் பாதி பேர் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்வதாக சர்வதேச காலநிலை மாற்றக் குழுவினுடைய சமீபத்திய அறிக்கை கூறுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வருமானம் குறைதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, காலநிலை தொடர்பான காரணங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு போன்ற பல்வேறு காரணிகள் நிலைமையை மோசமாக்கி வருவதாக எச்சரிக்கிறது.

ஐ.பி.சி.சி அறிக்கை குறிப்பிட்டிருக்கும் காலநிலை நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடல் மட்ட உயர்வு, பருவமழையில் நிகழும் மாறுதல்கள் போன்றவை 1991 முதலே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் இழப்பிற்கு வழிவகுத்துள்ளது என்று ஐ.நா அரசுகளுக்கு இடையிலான காலநிலை குழுவின் அறிக்கை கூறுகிறது.

ஐபிசிசி அறிக்கை தரும் 5 முக்கிய பாடங்கள்

அந்த அறிக்கையின்படி, பருவமழையில் நிகழும் மாற்றங்களால், வேளாண்மை மற்றும் மீன் பிடித் தொழில் மோசமாகப் பாதிக்கப்படுவதன் விளைவாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும். வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல வகை மீன்கள் தற்போது கிடைப்பதைவிட மேன்மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்த மாற்றத்தால் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறது.

சென்னையைச் சேர்ந்த மீனவர் பாளையம் பிபிசி தமிழிடம் பேசியபோது, "சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் பிடித்துக் கொண்டிருந்த கூர கத்தலை, வெங்கண், சுதும்பு, சொறிப்பாறை போன்ற மீன்களெல்லாம் இப்போது கிடைப்பதே இல்லை. அதேபோல், வாளம்பாறை, மட்டப்பாறை போன்ற மீன்கள் கண்ணில் படுவதே அரிதாகிவிட்டது. வரிநண்டுகளை அரசாங்கமே பிடிக்க வேண்டாம், பிடிபட்டாலும் விட்டுவிடுங்கள்என்கிறார்கள். அந்தளவுக்கு அவை எண்ணிக்கையில் குறைந்துவிட்டன.

முன்னர் 50 கிலோ கொண்ட பூல காலாவை அடையாற்றில் பிடித்துள்ளோம். ஆனால், இப்போதெல்லாம் காணப்படுவதில்லை. கோடைக்காலங்களில் அதிகமாகக் கிடைக்க வேண்டிய ஊத காலா, மோவான் என்றழைக்கப்படும் வெள்ளை வௌவால் போன்றவையும் கிடைப்பதில்லை," என்கிறார்.

கடல் மட்ட உயர்வு காரணமாக, இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை, சென்னை ஆகியவை மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தப் புதிய அறிக்கை, "காலநிலை நெருக்கடியைத் தணிக்கவும் நிலைமையை மாற்றவும் அரசுகள் இப்போது செயல்படவில்லை என்றால், நாம் இனி 'எதிர்காலத்தைப் பாதுகாக்க' முடியாது," என்று எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com