சென்னை காசிமேட்டில் ஜெமில் விஜய் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்று பழுதடைந்ததன் காரணமாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள படகுகள் தயாரிக்கும் இடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரும்பு படகு என்பதால் துருப்பிடித்த நிலையில் பல வருடங்களாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் இன்று அதன் உரிமையாளர் படகினை முழுவதுமாக பிரித்து வெட்டி எடுக்கும் பணியை தொடங்கினார்.
இரும்பு படகு என்பதால் கேஸ் கட்டிங் மூலமாக படகை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததனால் திடீரென படகின் உட்புறமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் பரமேஸ்வரன் தலைமையில் விரைந்து வந்த தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் பகுதியை சார்ந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.