
இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம்கள் செயல்படும் எனவும், சென்னையில் 1600 இடங்களில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்த வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நடைபெறாமல் இருந்த மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 24 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது.
தடுப்பூசி செலுத்த தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,அங்கன்வாடிமையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தமாக இடங்களில் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம்கள் மாலை 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு பொதுமக்களுக்கு ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கை கழுவுதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் 15-18 வயதுடைய சிறார்களுக்கு மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வருபவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.