உலக ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளில் நடந்த பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனையான சத்தீஷ் காரை சேர்ந்த ஞானேஸ்வரி ‘ஸ்னாட்ச்’ முறையில் 73 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 83 கிலோவும் என மொத்தம் 156 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை ரித்திகா மொத்தம் 150 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார். இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தோனேஷியாவின் வின்டி கான்டிகா அய்சாமொத்தம் 185 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 3 பதக்கம் வென்றுள்ளது.
முதல் நாளில் இந்திய வீராங்கனை ஹர்ஷதா ஷரத் காருட் (45கிலோபிரிவு) தங்கப்பதக்கம் வென்று இருந்தார். உக்ரைன் மீதானபோர் எதிரொலியாக ரஷியா மற்றும் பெலாரஸ் வீராங்கனைகளுக்கு இந்த போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.