12-வது உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் ‘லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்
இத்தொடரின் 19-வது லீக் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடந்தது. இதில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதின.’டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 203 ரன்னில் சுருண்டது. மேடி கிரீன் அதிகபட்சமாக 52 ரன்னும் (அவுட் இல்லை), கேப்டன் ஷோபின் டெவின் 41 ரன்னும் எடுத்தனர். காதே கிராஸ், ஜோபின் தலா 3 விக்கெட்டும், ஷார்லின் டீன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து விளையாடியது. அந்த அணி 106 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை (26.4 ஓவர்) இழந்தது. கேப்டன் ஹெதர் நைட் 42 ரன்னில் அவுட் ஆனார். இதனால் போட்டி நியூசிலாந்து பக்கம் திரும்பியது. எனினும், சிறப்பாக விளையாடிய சோபியா 33 ரன்களும், நாட் சிவர் 61 ரன்களும் சேர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 47.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்னை எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். நியூசிலாந்துக்கு 4-வது தோல்வி ஏற்பட்டது. போட்டியின் சிறந்த வீராங்கனையாக நாட் சிவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுவரை 19 லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஆஸ்திரேலியா தான் மோதிய 5 ஆட்டத்திலும் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. தென் ஆப்பிரிக்கா 8 புள்ளியும் வெஸ்ட் இண்டீஸ், 6 புள்ளியும், இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து தலா 4 புள்ளிகளும், வங்காளதேசம் 2 புள்ளியுடனும் உள்ளன. பாகிஸ்தான் இதுவரை மோதிய 4 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.