இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவர் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
முகமது சிராஜ் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனினும் போதிய வாய்ப்பு கிடைக்காமல் அணியுடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், பிங்க் நிற பந்து டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் சிராஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முகமது சிராஜ் இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரரின் சிறந்த செயல்பாடு என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றுள்ளார்.
இதே போன்று ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர் வீசிய ஓரே பவுலர், கடந்த ஐபிஎல் தொடரில் குறைந்த எண்ணிக்கையில் சிக்ஸ் அடிக்கவிட்ட ஒரே வீரர் என்ற பெருமையையும் முகமது சிராஜ் பெற்றார். முகமது சிராஜ்க்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும், அவரது திறமையை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வேகப்பந்துவீச்சாளர் ஜாம்பவான் டெயில் ஸ்டேயின் தெரிவித்துள்ளார்.
ஆனால் முகமது சிராஜ்க்கு தற்போது அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்ற ஜோகனஸ்பர்க் டெஸ்டில் முகமது சிராஜ் மொத்தமே 15 ஓவர் தான் வீசி இருந்தார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாடினாலும், அதன் பிறகு நடைபெற்ற தொடர்ந்து 5 டி20 போட்டியில் விளையாடவில்லை.
இந்த நிலையில், கடந்த 4 மாதமாக அணியுடன் பயணம் செய்யும் முகமது சிராஜ், கடும் பயோ பபுள் சூழலில் தான் தனது பொழுதை கழித்து வருகிறார். இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முகமது சிராஜ்க்கு இந்திய அணி நிறைய வாய்ப்பு தர வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.