சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இன்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர்.
ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான சிந்து, முதல் செட்டில் தொடக்கத்தில் 5-7 என்ற புள்ளி கணக்கில் சிந்து பின்தங்கி இருந்தபோதும், பின்பு அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து புள்ளிகளை வெற்றி கொண்டார். இறுதியில், முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார்.
இதன்பின் 2வது செட்டையும் அதிரடியாகவே சிந்து தொடங்கினார். ஒரு கட்டத்தில் 5-0 மற்றும் 8-1 என்ற கணக்கில் சிந்து முன்னிலை பெற்றார். பின்பு தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றி இறுதியில் 21-8 என்ற செட் கணக்கில் 2வது செட்டையும் தன்வசப்படுத்தினார்.
பூசனனுடன் பலப்பரீட்சை நடத்திய சிந்து, 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, இதுவரை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 16 முறை சிந்து வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த சீசனில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.