ஆனால் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை : கொல்கத்தா அணியிடம் தோல்வி குறித்து ரோகித் சர்மா விளக்கம் !!

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 52 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சுக்கு அதிர்ச்சி அளித்து 5-வது வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்கிறது.

கொல்கத்தா நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 17.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டு 9-வது தோல்வியை சந்தித்தது. 4 ஓவர்கள் பந்து வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளிய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில்,

“முதல் 10 ஓவர்களில் எதிரணியினர் எப்படி பேட்டிங் செய்தார்கள் என்பதை பார்க்கும் போது, அவர்கள் 10-11 ஓவர்களில் 100 ரன்னை எட்டினார்கள் என்று நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அவர்களை கட்டுப்படுத்திய விதம் மிகவும் அருமையானது. பும்ரா பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறந்த முயற்சியை வெளிப் படுத்தினர்.

இந்த ஆடுகளத்தில் 166 ரன் இலக்கு என்பது எட்டிப்பிடிக்க கூடியது தான். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்த விதம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. எங்களது பேட்டிங் பார்ம் கொஞ்சம் மோசமாக இருந்தது.

இந்த மைதானத்தில் நாங்கள் 4-வது முறையாக ஆடுகிறோம். எனவே இதுபோன்ற ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நாங்கள் அறிவோம். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை

எங்களது பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படாதது பாதகத்தை எற்படுத்தியது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நிலையான செயல்பாடு எங்களிடம் இருந்து தவறுகிறது. இந்த ஆட்டத்திலும் எங்களால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நிலையான திறனை வெளிப்படுத்த முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com