
தற்போது கோடை காலம் நெருக்கி விட்டது. இத்தகைய சூழ்நிலையில், ஏர் கண்டிஷனர் (AC) பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஏசியை டென்ஷன் இல்லாமல் பயன்படுத்தவும், மின்சார கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்கவும் என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதைக் காணலாம்.
ஜில்லென்று இருக்க வேண்டும் என ஏ.சி.யை 18 ° C அல்லது அதற்கும் குறைவான தட்ப நிலையில் அமைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு, இதனால் ஏ.சி சூடாவதோடு பழுதடையும் அபாயமும் அதிகரிக்கிறது. ஆனால், ஏர் கண்டிஷனரின் சராசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த வெப்பநிலை மனித உடலுக்கு சரியான அளவு என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏர் கண்டிஷனரில் உயர்த்தப்படும் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையும் சுமார் 6 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது. மின்சார கட்டணத்தை குறைக்க, ஏர் கண்டிஷனரின் சராசரி வெப்பநிலையை 18 °C க்கு பதிலாக 24 ° C ஆக வைத்திருங்கள்.
ஏசி அல்லது எலக்ட்ரானிக் கருவிகளை வாங்கும் போது, அதற்கு எத்தனை ஸ்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதன் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிக மதிப்பீடு அதாவது அதிக ஸ்டார்கள் உள்ள சாதனத்தை இயக்க குறைந்த அளவு மின்சாரமே தேவை . 5-நட்சத்திர மதிப்பீட்டு கொண்ட ஏர் கண்டிஷனர் உங்கள் அறையை திறம்பட குளிர்விக்கும் அதே நேரத்தில் மின் நுகர்வும் குறைவாக இருக்கும்.
அதோடு உங்கள் ஏர் கண்டிஷனரில் டைமர் வசதி இருந்தால், அதனை சரியான பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டைமர் உதவியுடன் ஏர் கண்டிஷனரை இயக்க / அணைக்க செட் செய்யலாம். இந்த அம்சத்தின் உதவியுடன், சில மணி நேரங்களுக்கு பிறகு தானாகவே ஏர் கண்டிஷனரை இயக்கவோ அல்லது அணைக்கவோ செய்வதால், சாதாரண முறையிலான பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது மின்சாரத்தை சேமிக்கிறது.
ஏ.சியில் இருந்து மின்சார நுகர்வு குறைக்க நீங்கள் அறையின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவதோடு நிற்காமல், அதை திரைச்சீலைகள் மூலம் மூட வேண்டும். இதைச் செய்வதன் மூலம், அறையின் குளிர்ச்சி பராமரிக்கப்படும், மேலும் ஏர் கண்டிஷனரும் அறையை வேகமாகவும் திறமையாகவும் குளிர்விக்கும்.
ஸ்மார்ட் ஏர் கண்டிஷனர் குளிர்ச்சிக்கும் காற்று ஓட்டத்திற்கும் இடையில் சரியான சமநிலையை பராமரிக்கிறது. ஸ்மார்ட் ஏர் கண்டிஷனர் அறைக்குள் உள்ளவர்களின் இயக்கத்தை கண்காணிக்கிறது மற்றும் தானாகவே அதற்கேற்ப செட்டிங்குகளை மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட் ஏர் கண்டிஷனர்கள் மின் நுகர்வுகளையும் குறைக்கின்றன.