இந்தியாவின் 'கடைசிகள்' பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்தியா பல அற்புதமான சுற்றுலாத் தலங்களால் நிரம்பியுள்ளது.மக்கள் தங்கள் படைப்பாற்றல் மற்றும் பயணத்தின் மீதான காதல் மூலம் இந்த இடங்களை பிரபலமாக்கியுள்ளனர்.இந்த இடங்கள் நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்களை ஈர்த்துள்ளது. இந்திய நிலப்பரப்பின் கடைசி பகுதிகளாக அறிப்படும் இடங்களை காணலாம்.
இந்துஸ்தானின் கடைசி கடை :
இது உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் இந்திய-சீன எல்லையின் இந்தியப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த கடையின் பெயரே அதன் அர்த்தமும் கூட. ஏனெனில் இது இந்திய-சீனா எல்லையில் உள்ள கடைசி கடை ஆகும்.
இந்த சிறிய கடை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த சிறிய கடை இந்தியாவின் கடைசி தேநீர் நிலையமாகும்.
இந்த டீக்கடை சந்தர் சிங் பத்வால் என்பவரால் நடத்தப்படுகிறது. இந்த கடை உண்மையில் சீன எல்லையில் இருந்து சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்தியாவின் கடைசி கிராமம் :
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள மானா கிராமம் அதிகாரப்பூர்வமாக 'இந்தியாவின் கடைசி கிராமம்' என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பத்ரிநாத் நகரத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள மானா கிராமம் பத்ரிநாத்திற்கு அருகிலுள்ள சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இந்த கிராமம் சரஸ்வதி நதிக்கரையில் உள்ளது. இது சுமார் 3,219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் இமயமலை மலைகளால் சூழப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடைசி ரெயில் நிலையம் :
சிங்காபாத், இந்தியாவின் பழமையான மற்றும் கடைசி ரெயில் நிலையம் ஆகும். இது வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது. சிங்காபாத், மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் ஹபிப்பூர் பகுதியில் கட்டப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்ட இந்த ரெயில் நிலையம், இன்று வரை அப்படியே உள்ளது. இதற்குப் பிறகு இந்தியாவில் வேறு எந்த ரெயில் நிலையமும் இல்லை. தெற்கில், கன்னியாகுமரி கடைசி ரெயில் நிலையம். கிழக்கில், லெடோ கடைசி ரெயில் நிலையம். இந்தியாவின் வடக்கே உள்ள கடைசி ரெயில் நிலையம், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா ஆகும். மேற்கில் கடைசி ரெயில் நிலையமாக குஜராத்தின் நாலியா ரெயில் நிலையம் உள்ளது.
இந்தியாவின் கடைசி சாலை :
தனுஷ்கோடி இந்தியாவின் கடைசி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் கடைசி சாலை என்று அழைக்கப்படும் அத்தகைய சாலை அங்கு உள்ளது. தனுஷ்கோடியின் இந்த சாலையில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் இலங்கை உள்ளது.
1964ம் ஆண்டு ராமேஸ்வரம் சூறாவளியின் போது இந்த நகரம் அழிக்கப்பட்டது.தனுஷ்கோடி பாம்பன் தீவின் தென்கிழக்கு முனையில் கைவிடப்பட்ட நகரம். தனுஷ்கோடி நகரம், ராமர் ஹனுமானிடம் பாலம் கட்ட உத்தரவிட்ட இடமாக கருதப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி - அரிச்சல்முனை கடல் பகுதி, முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தியாவின் கடைசி கடற்கரை :
கன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் மிக அழகான மற்றும் கடைசி கடற்கரையாகும். இந்த இடம் அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களின் சந்திப்பாகும். இங்கு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்கலாம்.