
சென்னை ராயபுரம் என்.1 காவல் நிலையத்தில் ஆறாவது நாளாக நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கையெழுத்திட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், காவல் நிலையத்தில் நாள்தோறும் வந்து கையெழுத்திடுவது பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவது போல இருக்கிறது என்றும் ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கு வந்து கையெழுத்திடுவது சந்தோஷமாக தான் உள்ளது என்றார்.
விடியாத அரசை பொறுத்தவரை நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று, அடக்குமுறை தீர்வல்ல, ஜனநாயகத்தில் அடக்கு முறையைக் கையாண்டால் கட்சி சரிவர நடக்காது என்று கூறிய அவர், அதிமுக கட்சியில் எழுச்சி உண்டாக்க நாள்தோறும் வடசென்னையை குறிப்பாக அதிமுக வசம் வைத்துக் கொள்ள அந்த கையெழுத்திட்டு சொல்கிறேன் என்றார்.
அதேபோல் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்று குறிப்பிட்ட அவர், அடுத்து வரும் தேர்தலில் திமுகவை விட 10% அதிக வாக்குகளை அதிமுக நிச்சயம் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். காவல்துறையை தன்வசப்படுத்தி திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின், துபாய், டெல்லி என சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டார். எனவே அடுத்ததாக மன்னிப்பு கேட்கும் சுற்றுப்பயணத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்
இந்நிலையில் திமுகவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் ராகுல்காந்தி ஏன் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், தற்போது பிஜேபி உடன் திமுகவினர் இணக்கமாக சென்று வருவதாகவும், திமுக இரட்டை குதிரையில் பயணம் செய்து வருகிறது என்பதை ராகுல்காந்தி, உணர்ந்ததால் அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவிற்கு வரவில்லை என்று தெரிவித்தார்.