சென்னை கோயம்பேடு பகுதியில் பா.ஜ.க மற்றும் வி.சி.க கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க துணை தலைவர் வி.பி துரைசாமி, பா.ஜ.க மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பல்வேறு
நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கோயம்பேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றனர்.
அதற்காக அங்கு பா.ஜ.க-வினர் கூடியிருந்த நிலையில், அங்கிருந்த வி.சி.க கட்சியைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க-வினர் மீது கல்லெறிதல் போன்ற தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு 4 பா.ஜ.க-வினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பா.ஜ.க-வினர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூறி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் உறுதியளித்துள்ளார்.
சம்பவ இடத்தில் பா.ஜ.க-வினர் தான் முதலில் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுவதையும், மதக்கலவரத்தை பா.ஜ.க-வினர் தூண்ட முயல்வதாக கூறப்படுவதையும் நாங்கள் வன்மையாக மறுக்கிறோம் என்றார்.
மத்திய இணை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்வில் இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெற்றதை வைத்து திங்கள் கிழமை சட்டசபையில் பா.ஜ.க சார்பில் கேள்வி எழுப்புவோம் எனவும்,
அதிகம் படித்த, புத்திசாலியான எங்கள் கட்சி மாநிலத் தலைவர் முரசொலி பத்திரிக்கையை தரம் தாழ்த்தி விமர்சிக்க வாய்ப்பில்லை என்றார்.