அகில இந்திய மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வில் (NEET) இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அவை ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி இருந்தார்; இந்நிலையில் சமீபத்தில் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டு அதிலும் மீண்டும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு ஆளுநரிடம் வழங்கிய மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை எனவும் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெற்றால் தான் அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் நீட் உள்ளிட்ட 3 மசோதாக்கள் கிடப்பில் வைத்துள்ள தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும் அவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் திமுக மக்களவை உறுப்பினரும் குழு தலைவருமான டி.ஆர் பாலு நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை அலுவல் நேரம் தொடங்கியவுடன் திமுக மக்களவை உறுப்பினர்கள் தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரியும் இவ்விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க கோரியும் முழக்கம் எழுப்பினர் இருப்பினும் இப்போதைக்கு இவ்விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து திமுக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.