137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை நேற்று விலை உயர்த்தப்பட்டது. 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரே விலையில் சீராக இருந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை கணிசமாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 50 ரூபாயும், பெட்ரோல் டீசல் விலை 76 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பு உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்கனவே வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக விலை குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிப்பதாகவும் ஆனால் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 1% கூட ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதால் பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.