நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக நாடாளுமன்ற வளாகம் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, மக்களவை உறுப்பினர் ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடியை சந்தித்த தமிழகம் முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதிப் பங்கீடு தொடர்பான கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
மிக முக்கியமாக மருத்துவ கல்விக்கான அகில இந்திய தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான கோரிக்கையை முன் வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோரையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் நிறைவாக மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உடனான சந்திப்பின் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் மத்திய அரசின் பதில்கள் தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.