மொத்தமாக வாங்குபவர்களிடம் இருந்து அரசுக்கு சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நிர்ணயிக்கும் டீசல் விலை உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதிகள் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபரி முராரி, ' நாளிதழ் ஒன்றில் படித்தோம். இரண்டு வருடங்கள் மட்டுமே பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கும் ஒரே மாநிலம் நீங்கள்தான். அதற்குப் பணம் இருக்கும் போது, இதற்கு ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்? எங்களின் வார்த்தைகளை மாநில அரசுக்குத் தெரிவியுங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? கேரளா உயர் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். அங்கு மனுவை தாக்கல் செய்யுங்கள். அவர்களால் இவ்விவகாரத்தை கையாள முடியும்' எனக் கூறினார்.
கேஎஸ்ஆர்டிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி கூறும்போது, 'உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை மாநில அரசிடம் எடுத்துச் சொல்வேன் என்றார்.
திங்களன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 5 அன்று கேரளா கவர்னர் ஆரிப் முகமது கானுடன் ஆன்லைனில் நடத்திய ஐடியா எக்ஸ்சேஞ்ச் நிகழ்வின் உரையாடலை வெளியிட்டது.
உரையாடலின் போது, ஆளுநர் கானிடம், கேரளாவில் அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பினர்கள். ஆனால், உங்களை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பது போல் தெரிகிறது. இவ்விவகாரத்தின் நிலைமை என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆளுநர், அதை தடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என கூறுவது சரிதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அரசும் எதிர்க்கட்சியும் கைகோர்த்துள்ளது. அரசு தரப்பில் இருந்து யாரும் நான் கூறியதற்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடுவதில்லை.
ஒவ்வொரு அமைச்சரும் 20க்கும் மேற்பட்டவர்களை 'கோ டெர்மினஸ்' அடிப்படையில் நியமிக்கிறார்கள். அவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றியதும், ஓய்வுதியம் பெற தகுதியுடையவர்களாக மாறுகிறார்கள். எனவே, ஒரு குழுவினர் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். இதையடுத்து, அடுத்த குழுவினர் பணிக்கு வருகிறார்கள்.
ஒவ்வொரு அமைச்சரும் சுமார் 45-50 பேரை நியமிக்கிறார்கள். ராஜினாமா செய்த பிறகு, அவர்கள் கட்சிக்காக முழுநேரமாக வேலை செய்கிறார்கள். தங்கள் சம்பளத்தை அரசிடமிருந்து ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள்.நாட்டில் எங்கும் இப்படி நடக்கவில்லை. இத்திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பினரும் பயனடைகின்றனர்.இதை முறையற்றதாக கருதுகிறேன்' என்றார்.