சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து, BGR Energy நிறுவனத்துக்கு மின்சார வாரியம் வழங்கிய ஒப்பந்தம் தொடர்பாகவும், மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு விவகாரம் தொடர்பாகவும் ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனுவினை அளித்தார். அப்போது அவருடன் பாஜக துணை தலைவர்கள் கே.பி ராமலிங்கம், வி.பி துரைசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைத்தலைவர் வி.பி துரைசாமி, தமிழ்நாடு நலன் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும் மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநரிடம் பேசியதாகவும், பி.ஜி.ஆர் நிறுவனம் குறித்த தெளிவான விளக்கத்தை அறிக்கையையும் ஆளுநரிடம் வழங்கியுள்ளோம் எங்களின் கோரிக்கையை கேட்டறிந்த ஆளுநர் பரிசீலிப்பதாக கூறியதாக தெரிவித்தார்.
பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது தொடர்பாக அண்ணாமலைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது. 24 மணி நேரத்திற்குள் தனது குற்றச்சாட்டுகளை அண்ணாமலை நிரூபிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.