
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய வழங்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயக ரீதியில் பேச தெரியாத விடியாத திமுக அரசு பொய் வழக்குகளை போடுவதாகவும், அதிமுக சிறைக்கு கூட அஞ்சாத இயக்கம் என்றும், பொய் வழக்குகள் போட்டுவிட்டால் விமர்சிக்கமாட்டார்கள் என நினைத்து, என் இயக்க பணி கழக இயக்க பணியை முடக்க வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், என் கையெழுத்து இந்த அரசிற்கு தேவைப்படுவதாக கூறிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் டோரா பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இன்ப சுற்றுலா குறித்து யாரும் வாய் திறக்கவில்லை என்றும், 6 மாதம் நடந்த கண்காட்சியை முடியப்போகும் நேரத்தில் ஸ்டால் திறப்பது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலுக்கு முன்பாக, முதல்வரை நேரில் சந்திக்கலாம் என மு.க.ஸ்டாலின் கூறியதாக குறிப்பிட்ட அவர், எத்தனை பேர் அப்படி சந்தித்துள்ளனர்? என்றும், மனுக்கள் ஒவ்வொன்றையும் பெட்டியில் இருந்து முதல்வரே திறப்பேன் என கூறியிருந்த நிலையில், மற்ற பெட்டிகளை தான் திறந்து வருகிறார் எனவும் விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளதாகவும், விளம்பர அரசு மட்டும் நடைப்பெற்று வருகிறது என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் எதிர்கட்சியை மட்டுமே ஒழிக்க வேண்டும் என திமுக நினைப்பதாகவும் கூறினார். சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் எந்த தாக்கமும் இருக்காது என கூறிய அவர், இது சுதந்திர நாடு , அவர் freebird ஆக எங்கு வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் செல்லலாம் எனவும் தெரிவித்தார்.