முன்னதாக தன்னை கைது செய்யும் போது காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக சென்னை பசுமை வழி சாலை யில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 35 ஆண்டுகளாக எந்த ஒரு வழக்கும் இல்லாமல் மக்கள் பாராட்டும் வகையில் வாழ்ந்து வந்ததாகவும், அதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு பதவிகளை அளித்ததாக தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டை வைத்து தன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய அவர், சமூக விரோதியான நரேஷ் என்பவர் மூலம் ஒரு பொய்யான புகாரை அளிக்க வைத்து தன்னை கைது செய்ததாக தெரிவித்தார்.
அது மட்டுமின்றி மனித உரிமையை மீறி அத்துமீறி தன் வீட்டிற்குள் நுழைந்து தன்னை கைது செய்ததாக குற்றம் சாட்டிய ஜெயக்குமார், தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த போது திரைப்பட தொழிலை வளரவிடாமல் செய்ததாகவும், தற்போது ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சிறிய தயாரிப்பாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு படங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கை தலைதூக்கி உள்ளதாக குற்றச்சாட்டினார். இந்த நடவடிக்கையை தொடர்ந்து நடைபெற்றால் திரைத்துறையில் பெரிய பூகம்பமே வெடிக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.