விலைவாசி குறைய வாய்ப்பில்லை : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு !!

தற்போதைய பிரதமரும், நிதி அமைச்சரும், பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
Karti Chidambaram - கார்த்தி சிதம்பரம்
Karti Chidambaram - கார்த்தி சிதம்பரம்

கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

'இந்தியாவில் குறிப்பாக கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது இந்தியாவிற்கு சமத்துவம் மிகவும் அவசியம். மத்தியில் இருக்கும் பாஜக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும், என்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பாபர் மசூதி தீர்ப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், தலாக் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு தருணத்திலும் இஸ்லாமிய மக்களை ஒடுக்க நினைக்கிறார்கள். ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லக்கூடாது தேர்வு எழுத முடியாது.

இந்து கோவில்களில் பண்டிகைகள் நடைபெறும்போது ஹிந்து மக்களை சாராதவர்கள் கடை வைக்க கூடாது. உத்திரபிரதேசத்திலும் பாஜக அரசியல் புல்டோசர் அரசாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் எனக் கூறுவதை முழுமையாக வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார்.

தற்போதைய மத்திய அரசு மற்றும் நிதியமைச்சர், பிரதமர் இருக்கும் வரை விலைவாசி குறையாது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் மற்ற அனைத்து பொருட்களின் விலையும் உயரும், பொருளாதார சுமையை சாதாரண மக்கள் மீது, மத்திய அரசு சுமத்தி வருகின்றது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள், பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி குறையாது.

கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் மத்திய அரசு விலையை குறைக்கவில்லை. ஏற்கனவே பல்வேறு அடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எந்த நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. இதிலிருந்து மீண்டு வராத நிலையில் பெட்ரோல் டீசல் வரி சுமை மூலம் இந்தியாவை பாதாளத்திற்கு தள்ளி விட்டனர்.

பஞ்சு விலையில் 10 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் வரியை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இந்துத்துவாவை வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பதால் மற்ற பிரச்சனைகளை பற்றி சிந்திப்பதில்லை.

தமிழக அரசு மகளிர் இலவச திட்டங்களை நிறுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு: புதிய அரசு அமைந்த பிறகு வந்த நிதியமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் தற்போது மாநிலத்தில் இருக்கும் நிதிநிலைமை குறித்தும் தெரிவித்துள்ளார். எல்லா நேரத்திலும் சலுகைகளை வழங்க முடியாது. இலவச திட்டங்களை சற்று குறைக்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு வந்திருக்கும் ஆலோசனை, அதேவேளையில் கல்வி கற்கும் மகளிருக்கு நிதி வழங்க உள்ளனர்.

அரசின் இந்த முடிவு இடைக்காலத்தில் கசப்பாக இருந்தாலும், இந்த முடிவு நன்றாக இருக்கும் என்பது என கருத்து என தெரிவித்தார். அதே போல ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை குழந்தை என்ற கருத்தையும், அடுத்த தலைவர் என்று கூறிய இரண்டு கருத்துகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகம், தொண்டர்கள் குறைவு என்பது சோம்பேறித்தனமான விமர்சனம்.

இந்தியா முழுவதும் பாஜகவிற்கு அடுத்து 19 முதல் 20 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ். பாஜக பிரதான கட்சி அதற்கடுத்ததாக காங்கிரஸ் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளோம். நாங்கள் கூட்டணி சேருமிடம் வெற்றி பெறுகிறது, இது ஆய்வுக் கருத்து அல்ல எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com