அரவணைக்கும் பணிகளையும் காவல்துறை செய்கிறது... அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!!

மனிதாபிமானத்துடன் அரவணைக்கும் பணிகளையும் காவல்துறை செய்வதாக அமைச்சர் சேகர் பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

சென்னை காவல்துறையின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், ஆதரவற்ற நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து மனநிலை பாதிக்கபட்ட நிலையில் தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மீட்கப்பட்ட 62 பெண்கள் உட்பட 176 வட மாநிலத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கருணை பயணம் என்ற தலைப்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கீடுடன் 6 லட்சம் ரூபாய் செலவில், சென்னை காவல்துறையின் காக்கும் கரங்கள் ஒருங்கிணைந்து ஆதரவற்றோருக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆதரவற்றவர்களுக்கான மேற்கொள்ளும் பணிகள் வெறும் பேயருக்காக இல்லாமல், அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அனைவரும் பாராட்டக்கூடிய செயலாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ கட்டமைப்புகள் என அனைத்தையும் சீரான முறையில் செய்து தர வேண்டும். மேலும், இன்று 176 நபர்கள் ரயில்கள் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அடுத்தபடியாக இங்கிருந்து வட மாநிலங்களுக்குச் சென்று அங்கிருக்கும் தமிழர்களை மீட்கும் பணிகளையும் தன்னார்வலர்களுடன் இணைந்து தொடர்ந்து செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழக காவல் துறை முதல்வர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. முழு அளவு சுதந்திரத்தோடு குற்ற பின்னணியை கவனித்து, முழு பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் இதுவரை குற்றங்களுக்கு எதிராகவும், கலவரங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்த காவல்துறை, இன்று மனிதாபிமானத்துடன் தங்கள் கரங்களால் அரவணைத்தும் உள்ளது என்பது இன்றைய நிகழ்ச்சியின் வரலாறு. மேலும், இந்த நிகழ்ச்சியில் புகழ் இருக்காது, பெருமை இருக்காது ஆனால் மனிதாபிமானம் இருக்கும்

இன்றைய தினம் அனுப்பி வைக்க கூடிய இவர்கள் யார் எவர் என தெரியாது, தொப்புள்கொடி உறவு கூட கிடையாது, கூடிய விரைவில் அவரவர் ஊர்களுக்கு சென்று அவரவர் குடும்பங்களுடன் ஒன்று சேர்ந்து மேலும் குணமடைவார்கள்.

இதற்கு முன்பு காணாமல் போனவர்களின் உறவினர்கள், இவர்கள் மறைந்து விட்டார்கள் என நினைத்து ஈம சடங்கு கூட செய்திருக்க கூடும். ஆனால் இவர்களை திரும்ப உயிர்த்தெழுப்பி மீட்டு சேர்க்கும் பணியை செய்த பெருமைக்குரிய தமிழக  காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com