முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு இன்று காலை சில முக்கிய தகவல்களை திடீரென தாக்கல் செய்துள்ள நிலையில் இன்றைய வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது அடுத்து வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின பாதுகாப்பு தன்மை குறித்து கேள்வி எழுப்பி ஜாய் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு அதன்பிறகு கேரள அரசு தாக்கல் செய்த மனு இந்த மக்களுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு ஆகியவை அனைத்தும் சேர்த்து உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பு எதிர்மனுதாரர் தரப்பு என அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தில் எந்தெந்த அம்சங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே கேரளா இன்று காலை தான் சில தகவல்களை புதிதாக தாக்கல் செய்திருப்பதாகவும் அவை என்னவென்று இன்னும் படித்துப் பார்க்கவில்லை என்றும் எனவே வழக்கின் விசாரணையை நாளைய தினம் ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.