9 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின். மணமக்களுக்கு 33 வகையான சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்து அசத்தல்!!

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 ஜோடிகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 33 வகையான இலவச சீர்வரிசைப் பொருட்களை மணமக்களுக்கு வழங்கினார்.
 9 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின். மணமக்களுக்கு 33 வகையான சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்து அசத்தல்!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திமுக சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மணமக்களுக்கு மாலை மற்றும் தாலி எடுத்து கொடுத்து மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். 9 ஜோடிகளுக்கும் அவர்களது சமூக முறைக்கு ஏற்ப குடும்பத்தினர் கேட்டுக் கொண்டபடி தாலிச்சரடுகள் இடம்பெற்றிருந்தன.

. குத்துவிளக்கு, தங்கத் தாலி, பீரோ, கட்டில், பூஜை பொருட்கள், மிக்சி, மெத்தை, எரிவாயு அடுப்பு, தண்ணீர் குடம், ரைஸ் குக்கர், அண்டா + மூடி, இட்லி குக்கர், மசாலா டப்பா, சாப்பாடு தட்டு, தலையணை, சாப்பாட்டு பாய், தோசை கல், பால் குக்கர், கடாய் குழம்பு, குண்டா கரண்டி, தண்ணீர் டம்ளர், சொம்பு, பெரிய தட்டு, டிபன் பாக்ஸ், தேநீர் குவளை, வடிதட்டு, சின்ன கரண்டி உட்பட 33 வகையான சீர்வரிசைப் பொருட்கள் முதலமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், நான் முதல் முறை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினராகி ஆய்வு நடத்தியபோது இந்த மண்டபம் சமூக விரோதிகளால் பாழடைந்து கிடந்தது.

காமராசரால் 1966 ஆம் ஆண்டு இந்த மண்டபம் திறக்கப்பட்டது. நான் இந்த மண்டபத்தை சீர் செய்ய கூடாது என அரசியல் காழ்ப்புணர்வால் சிலர் வழக்கு தொடர்ந்தனர். கழக வழக்கறிஞர்கள் மூலம் தீர்ப்பு பெற்று குளிர்சாதனம், லிப்ட் , பார்க்கிங் வசதியுடன் முழுமையாக மண்டபத்தை கட்டி முடித்துள்ளோம். 700 பேர் வரை மண்டபத்தில் அமர முடியும். சீரமைத்த பிறகும் காமராசர் பெயரிலேயே இந்த மண்டபம் இருக்கிறது.

அவர் திறந்து வைத்ததற்கான கல்வெட்டும் அப்படியே இருக்கிறது. அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் காமராசரை மதிப்பவன் நான், என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் காமராசர் . கருணாநிதி என் திருமண அழைப்பிதழை காமராசரிடம் கொடுத்தபோது ஸ்டாலின் சுறுசுறுப்பான இளைஞராக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன், அவரது திருமணத்திற்கு நேரில் வர ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு உடல் நலம் இல்லையே என்றார் . உடனே கருணாநிதி, நீங்கள் வருவதாக இருந்தால் திருமண மண்டபத்தையே மாற்ற தயாராக இருக்கிறேன் என்றார்.

அதன்படி காமராசரின் கார் மணமேடைவரை வருவதற்கு ஏற்றவாறு, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மண்டபத்தில் இல்லாமல், மாற்று மண்டபத்தில் எனக்கு திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். மேலும், பாரதிதாசன் கூறியபடி வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள் என வாழ்த்தி விடைபெறுகிறேன் என்று கூறியதாக தெரிவித்தார். திருமண நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரு.வி.க நகர் , பல்லவன் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com