ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களையே மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்... ஓ.பி.எஸ் சாடல்!!

ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
ஒ.பன்னீர்செல்வம்
ஒ.பன்னீர்செல்வம்

சென்னை புரசைவாக்கத்தில், மே தினத்தையொட்டி அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை அழிக்க திமுக சதி செய்த போதும் எம்ஜிஆர் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். அவரை தொடர்ந்து ஜெயலலிதா 30 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந்தார். 30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. உழைப்பவரே உயர்ந்தவர் என்று தான் எம்ஜிஆர் கையெழுத்திடுவர். 505 வாக்குறுதிகளை அளித்து பொய்யை சொல்லி சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. இன்று திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆயிற்று.எந்த உருப்படியான திட்டத்தையும் தரவில்லை.

குருவிக்கு கூட கூடு உள்ளது. ஏழைக்கு வீடில்லை. இதற்காக 6.5 லட்சம் ஏழைகளுக்கு தரமான வீடு கட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. பெண்களுக்கென பல்வேறு சமூக நலத்திட்டங்களை கொடுத்தவர். பெண்களுக்கு 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

அவருக்கு பின் வந்த எடப்பாடி பழனிச்சாமி அதை நிறைவேற்றினார். திமுகவினர் அந்த திட்டத்தை நிறுத்தியுள்ளனர்.

அம்மா ஸ்கூட்டி திட்டத்தில் பெண்கள் வண்டி ஓட்ட ஆண்கள் அமர்ந்து செல்லும் நிலையை ஏற்படுத்தினார்.

ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக, இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்ற நிலை வந்துள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com