
ஹலால் மாமிசத்தை இந்துக்கள் வாங்கக்கூடாது என பஜ்ரங் தள் அமைப்பினர் கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் ஹலால் மாமிசம் வழங்கப் மறுத்த கடைக்காரர் மீதும் உணவக உரிமையாளர் மீதும் இந்துத்துவா அமைப்பினர்கள் சிவமோகா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா அமைப்பினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் கடைகளுக்குச் சென்று ஹலால் இல்லாத மாமிசத்தை வழங்கவேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உணவகங்களில் சென்று ஹலால் இல்லாத உணவை வழங்க வேண்டுமெனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்த இரண்டு கடைகளில் இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹொசமனை என்ற பகுதியில் தோசிப் என்ற மாமிச கடைக்காரர் மீதும் பலைய பத்ராவதி பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த நிலையில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ஐந்து நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சிவமோகா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார்.