
சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பல்வேறு ஆபத்துக்களை உருவாகி வருவதாகவும் அதனுடைய பாதிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் பெரும் தீங்காக அமையும் எனவே மாணவர்கள் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பெற வேண்டியது அவசியம் என வலியுறுத்தி பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நேற்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. இருந்தபோதிலும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருந்த 7 கேள்விகளில் ஆறு கேள்விகள் தவறானவை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்ற அவர், தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மீண்டும் சட்டமியற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது என்றார். தமிழக அரசு அனுப்பி வைத்த நீட் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்பதையே காட்டுகிறது என்றார்.