பட்டியலில் சேர்க்கப்பட்ட தோசை, இடியாப்பம்... மாணவர்கள் குஷி
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் விடுதிகளில், ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றம் இல்லாமல், உணவு வகைகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.தோசை மற்றும் இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாரம் ஒருநாள், முதல் மற்றும் 3வது வாரம் ஆட்டு இறைச்சி 80 கிராம், 2 மற்றும் 4வது வாரம் கோழி இறைச்சி, 100 கிராம் வீதமும் கணக்கிட்டு வழங்கப்படுவதோடு, மாணவருக்கு, மாதம் 20 நாட்கள் முட்டையும் வழங்கப்படுகிறது.முட்டை சாப்பிடாதவருக்கு, வாழைப்பழம் வழங்கப்படுகிறது.
அதேப்போல், மாலைநேர சிற்றுண்டியாக வேகவைத்த பயறு வகைகள், சுக்குமல்லி அல்லது கருப்பட்டி காபி வழங்கப்படுகிறது. இதுவரை, சேமியா, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் போன்ற காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், இத்துடன், சாம்பார், சட்னியுடன் தோசை அல்லது நவதானிய தோசை, பட்டாணி குருமா அல்லது தேங்காய் பாலுடன் இடியாப்பம் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊட்டச்சத்து மிகுந்த உணவை, சுவையாக தயாரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, விடுதி பராமரிப்பு நிதியில் இருந்து, தோசைக்கல், இடியாப்பம் தயாரிக்கும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.