இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை... அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!!

அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கான டிரிப்பில் ஆர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதனை கடந்த 12ம் தேதி காணொலி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் அந்த பூங்காவை இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஒரு சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர்.

சாதாரண பூங்காவாக இல்லாமல் உணர்வு பூங்காவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காவை அமைத்துள்ளனர். இந்த பூங்காவை எனது பேரக்குழந்தைகள் பார்த்துவிட்டு என்னை சென்று பார்வையிட வேண்டும் என பரிந்துரைத்தனர். இங்கு வந்து பார்த்த போது இந்த பூங்கா அற்புதமாக உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா, 2.23 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்போது இந்த பூங்கா புனரமைக்கப்பட்டு உள்ளது.

ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பாதி நாள் கொரோனா, வெள்ளம் என இதிலே சென்றுவிட்டதால் தற்போது அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தபட்டு வருகிறது. திமுக ஓராண்டு ஆட்சியை, அதிமுக புகழவா செய்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் அவர்கள் விமர்சனம் தான் செய்வார்கள். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றதா என்ற கேள்வி இருக்கிறது.

தொடர்ந்து திமுக அந்த பணிகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி எல்லா ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருக்கிறது. அது செயல்படுத்தப்படவுள்ளது. அதேபோல் 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com