மலைப்பகுதிகளில் மதுபான கடைகளை மூட ஏன் உத்தரவிடக்கூடாது?

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மலைப்பகுதிகளில் மதுபான கடைகளை மூட ஏன் உத்தரவிடக்கூடாது?

வனவிலங்குகளை பாதுகாக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயர் நீதிமன்ற உத்தரவு படி இயற்கைக்கு மாறாக யானைகள் இறப்பு, ரயில்களில் மோதி யானைகள் இறப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கபட்டது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், மாவட்ட ஆட்சியர், வனம், ரயில்வே, நெடுஞ்சாலை ஆகிய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். இக்குழு கடந்த 22 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வை நடத்தியது. யானைகள் வழித்தட பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் இது தொடர்பாக எடுக்கபட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிபான பதிலை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

அப்போது வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பான இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி நீதிபதிகள் முன்பு காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடுவதற்கு உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார். இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் கடுமையான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க நேரிடும் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com