தமிழக மக்களுக்காக எல்லா அவமானங்களையும் சந்திக்க தயார் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை !!

நீட் விலக்கு கோரும் மசோதாவில் தேவைப்பட்டால் அனைத்துக்கட்சி கூட்டம் கூடி ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
தமிழக மக்களுக்காக எல்லா அவமானங்களையும் சந்திக்க தயார்  : சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை !!

சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடப்பதாகவும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டமுன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாரின்றி கிடக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டமன்றத்தின் மாண்பையும்,தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தாக வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல என்றும், இந்தச் சபையின் மாண்புக்கு விரோதமானது எனவும் தெரிவித்தார்.

ஆளுநர் அனுப்பி வைக்காதது என்பது எனக்கல்ல, இந்தத் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக்கூடிய செயலாகும் என கூறிய அவர்,கடந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் தான் எத்தனையோ வலிகளையும், அவமானங்களையும் சந்தித்து வந்திருப்பதாகவும், அது தனக்கு ஒரு பொருட்டல்ல எனவும், இந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கை கற்றுத் தந்தது வலிகளையும், அவமானங்களையும், புகழ்ச்சிகளையும், பாராட்டுரைகளையும் புறந்தள்ளிவிட்டு - “என் கடன், பணி செய்து கிடப்பதே”என்று செயல்படுவதுதான்.

அப்படித்தான் தான் செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் என்றால், புகழ்ச்சிகளையும், பாராட்டுரைகளையும் புறந்தள்ளி விட்டு, அவமானங்களையும், வலிகளையும் தாங்கிக் கொள்ள எப்போதும் தயாராக இருப்பேன் என கூறிய முதலமைச்சர்,

தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வாக இருக்கக்கூடிய நீட் விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம் என்றும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருப்பேன் எனவும் உறுதிப்பட கூறினார்

தேவைப்பட்டால், அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com