இலங்கைக்கு உதவிட அனுமதி : மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம் !!

இலங்கைக்கு உதவிட அனுமதி : மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம் !!

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கிட, மத்திய அரசிடம் அனுமதி கோரி சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

இது குறித்து சட்டபேரவையில் பேசிய அவர், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழக அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான அனுமதியை கோரி ஏற்கெனவே மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, சட்டபேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மேலும், இந்த தீர்மானத்தை கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் ஒரு மனதாக ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக பேசிய அவர், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கை கொடுக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

இலங்கை மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் சோகத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், மண்ணெண்ணெய் வாங்க 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாகவும், பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பால், பால் பவுடர் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் நூறு சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதால், பச்சிளம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தீர்மானமானத்திற்கு, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com